கனிமொழி எம்.பி தூத்துக்குடி செய்தியாளர் சின்னராஜன்
தமிழ்நாடு

"ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதே முதல்வரின் கனவு!" - கனிமொழி எம்.பி. பேச்சு

PT WEB

மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்த்தப்பட்டதற்கான ஆணையை வழங்கிய கனிமொழி!

மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையானது 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்ட ஆணைகளை வழங்கினார்.

Kanimozhi

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள், பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை வழங்கினார்.

சரிசமமாக நடத்தியதற்காக ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சரிசமமாக நடத்தியதற்காக நான்கு ஊராட்சிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் காசோலை, வருவாய் துறை சார்பில் கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆணைகள், வேளாண்மை துறை சார்பில் பட்டு பூச்சி வளர்ப்பில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் முதலியவற்றை வழங்கினார். இன்று மட்டும் மொத்தமாக சுமார் ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை கனிமொழி எம்பி வழங்கி சிறப்பித்தார்.

கனிமொழி

இதனை தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, "மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்து, அதற்காக தனி துறையை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் கலைஞர். அவர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மாற்று திறனாளிகள் நலத்துறையை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தியும் வழங்கி உள்ளார்.

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதே முதல்வரின் கனவு!

கனிமொழி

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதே பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் அவர்களை தொடர்ந்து, தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் கனவாகவும் உள்ளது. ஜாதி பாகுபாடுகளை, வேற்றுமைகளை களைந்து விட்டு அத்தனை பேரும் சமம் என நினைக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்ட வேண்டும் அவருடைய கனவு. அந்த வகையில் தான் பஞ்சாயத்துகளில் அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற நிலையை உருவாக்கி செயல்பட்டுவருகின்றார்" என தெரிவித்தார்.