ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது என திமுக எம்.பி கனிமொழி கடுமையாக சாடியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியானது. இதில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகமாக இருந்தது. இதையடுத்து எழுந்த சர்ச்சையினால் தேர்வு முடிவுகள் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும்? இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.