செய்தியாளர்: நரேஷ்
முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் 7 நாட்கள் நடைபெற உள்ள கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்து மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவடி மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத உற்சவர் சண்முகருக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை பூஜைகள் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய விழாவான வருகின்ற 7-ஆம் தேதி அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்காரம் நடைபெறும். ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் பல்வேறு வண்ண மலர்களால் டன் கணக்கில் புஷ்பா அஞ்சலி வெகு விமர்சையாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்தும் காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த விழாவின் ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் கோவில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.