தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தும் நீரின்றி காணப்படும் காஞ்சிபுரம் கோயில் குளங்கள்

வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தும் நீரின்றி காணப்படும் காஞ்சிபுரம் கோயில் குளங்கள்

kaleelrahman

வடகிழக்கு பருவமழை பெய்தும் காஞ்சிபுரத்திலுள்ள கோயில் குளங்கள் நிரம்பாமல் வறண்டு காணப்படுவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஊரில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நம் முன்னோர்கள் கோயில்களுக்கு அருகே திருக்குளங்களை அமைத்தனர். மழை பெய்யும்போது மழைநீர் கோயில் குளங்களில் நிரம்புவதால், அந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் குடிநீர் பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் கோயில் குளங்களை முறையான பராமரிக்காததாலும் வரத்து கால்வாய்கள் அடைபட்டு கிடப்பதாலும் பல குளங்கள் நீரின்றி சாக்கடை கலந்த நீரோடு புதர்மண்டி காணப்படுகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரம் நகரத்தில் ஏகாம்பரநாதர் கோயில், மங்களதீர்த்த குளம், வைகுண்ட பெருமாள் கோயில், ரங்கசாமி குளம், பொய்யாகுளம், அஷ்டபூஜ பெருமாள் கோயில் குளம், என 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால் 5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த காஞ்சிபுரம் பாலாற்றில் கூட மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால், காஞ்சிபுரத்திலுள்ள கோயில் குளங்களுக்கு சிறுதளவு கூட நீர்வரத்து இல்லாதது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள பிரதான கோயில் குளங்கள் முறையாக பராரிப்பின்றி தூர் வாரப்படாமல் இருப்பதால் கனமழை பெய்தும் கோவில் குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. எனவே குளங்களை சரியான முறையில் பராமரித்து தூர்வாரி மழைநீர் குளங்களுக்கு செல்லும் வகையில் திட்டங்களை தீட்ட புதிதாக அமைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சிபுரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.