தமிழ்நாடு

காஞ்சிபுரம்: புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழில்; நிவாரணம் வழங்க கோரிக்கை

kaleelrahman

புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உரிய நிவாரணத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறையினர் வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காஞ்சிபுரத்தில் நிவர் புயல் காரணமாக பலரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நெசவுத்தொழில், புயல் காற்று மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயலின்போது பெய்த கன மழையால் பல நெசவாளர்களின் வீடுகள் பழுதாகி, தறியில் உள்ள பட்டு சேலை மீது மழை நீர் தெளித்துள்ளதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கறை அழுக்குகூட இல்லாமல் நெய்ய வேண்டிய பட்டு சேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்படைந்த நெசவாளர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக நிவாரணம் வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கைத்தறி உபகரணங்களை தற்போதைய கனமழை காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 8 மாத காலமாக வேலையில்லாமல் முடங்கியுள்ள நெசவாளர்கள் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக எந்த ஒரு வேலையும் இல்லாமல் வீட்டில் முடங்கி போய் இருக்கிறார்கள்.

மேலும் முருகன் சவால்கள் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் தற்போது பெயர்ந்து மழைநீர் வீட்டுக்குள் வடிந்து கொண்டிருக்கிறது. இதனால் வீட்டினுள் தங்குவதற்கு கூட வழியில்லாமல் தறியில் செய்து கொண்டிருக்கும் பட்டுப்புடவை மீது மழை நீர் பட்டு விடுமோ என்கின்ற ஏக்கத்தில் இரவு பகலாக கண்விழித்து காத்து வருகிறார்கள்.


வருமானத்தை பாதிக்கும் இது போன்ற இடர்பாடுகளுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக, மழைக் காலத்தில் நெசவுத் தொழில்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறது. மழைநீர் தெளித்து, பட்டு சேலைகளில் கறைபடுகின்றன. மேலும் கடந்த பல மாதங்களாக எந்த ஒரு வேலையும் இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நெசவாளர்களுக்கு அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்