திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வந்த கலைவாணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து அங்கு பதவியேற்ற அவர், தன்னுடைய இரு குழந்தைகளான பிரார்த்தனா மற்றும் சாய்பிரணவ்-ஐ காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
இதையடுத்து இக்குழந்தைகள் இன்று பள்ளி துவங்கும் முன்பே வந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவருந்தி இறைவணக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களது பெற்றோரும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியருமான கலைவாணி அதில் பங்குபெற்றார். அப்போது பேசிய அவர், “அரசுப் பள்ளி மாணவியான நான் ஆசிரியர்களின் சொல்படி கல்வி பயின்றதாலேயே தற்போது அரசு அதிகாரியாக இங்கு நிற்கிறேன். நான் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன்” எனக் கூறினார்.
மேலும், “இங்கு பயிலும் அனைவரும் என்னை போலவே பெருமை கொள்ளும் வகையில் உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அன்னைக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளதால் அவர்களின் நல்வழி காட்டுதல்படி அனைவரும் கீழ்படிய வேண்டும். அரசு ஏராளமான நலத் திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு செய்து வரும் நிலையில், அனைவரும் அரசுப் பள்ளிகளை பெருமைப்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்.