தமிழ்நாடு

கூலித்தொழிலாளியை திடீரென ரூ.55,000 மின்கட்டணம் செலுத்த சொன்ன அதிகாரிகள்! அதிர்ச்சி பின்னணி

கூலித்தொழிலாளியை திடீரென ரூ.55,000 மின்கட்டணம் செலுத்த சொன்ன அதிகாரிகள்! அதிர்ச்சி பின்னணி

webteam

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒரிக்கை அருகேயுள்ள முரளிநகர் பகுதியில் வசிப்பவர், கூலித் தொழிலாளி மணிகண்டன். இவர், முரளிநகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக ஓரிக்கை மின்சார வாரிய அலுவலகம் மூலம் தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளார் அவர். வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனின் வீட்டுக்கு தற்காலிக இணைப்பு துண்டிக்கப்பட்டு குடியிருப்புக்கான நிரந்தர மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மணிகண்டனின் வீட்டுக்கு மின்சாரத்தை கணக்கீடு செய்ய மின் கணக்கீட்டாளர், ஒருமுறை கூட செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கடந்த 8 மாதங்களாக 2 மாதங்களுக்கு ஒருமுறை ஓரிக்கை மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று மின் கட்டணத்தை கேட்டு அபராதத்துடன் செலுத்தி வந்துள்ளார் மணிகண்டன்.

அப்போதும், மின்வாரிய அதிகாரிகள் முறையாக கணக்கீடு செய்யாமல் வீடு பூட்டப்பட்டுள்ளதாக பதிவு செய்து, தோராயமாக ஒரு கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். இந்நிலையில், இம்மாதம் மின் கட்டணம் செலுத்த மணிகண்டன் சென்றபோது, ரூ.55,230 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இளநிலை மின் பொறியாளரை அணுகியுள்ளார். அவரும், `மொத்தமாக செலுத்தாமல் தவணை முறையில், 3 தவணையாக செலுத்துங்கள்’ என தெரிவித்துள்ளார். இதனால் மணிகண்டன் அவரிடம், “என் வீட்டுக்கு ஏன் முறையாக மின்சாரம் கணக்கீடு செய்ய பணியாளர்கள் வரவில்லை? மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மட்டும், ‘மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என தெரிவிக்க பணியாளர்கள் வருகின்றனர்... இதற்கு ஏன் வருவதில்லை” என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மின்சார வாரிய அதிகாரிகள் யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் ரூ.55 ஆயிரம் மின் கட்டணத்தை எவ்வாறு கட்டுவது என செய்வதறியாமல் உள்ளார் மணிகண்டன்.

இதுகுறித்து ஓரிக்கை மின்சார வாரிய அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, “மின் கணக்கீட்டாளர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் மணிகண்டன் வீட்டுக்கு முறையாக மின் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.