தமிழ்நாடு

காஞ்சிபுரம்: கனமழையால் நெசவுத்தொழில் பாதிப்பு – நெசவாளர்கள் கவலை

காஞ்சிபுரம்: கனமழையால் நெசவுத்தொழில் பாதிப்பு – நெசவாளர்கள் கவலை

Veeramani

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், கைத்தறி உபகரணங்கள் ஈரப்பதமாகி நெசவுக்கு ஏற்ற வகையில் இல்லாததால், நெசவுத்தொழில் முடங்கியுள்ளது என நெசவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்கள் ஈடுபடும் நெசவுத்தொழில், தற்போது மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. கைத்தறியின் அனைத்து உபகரணங்களுமே மரத்தால் செய்யப்பட்டுள்ளதால், ஈரப்பதம் காரணமாக நெசவுத்தொழிலுக்கு அவை ஒத்துழைப்பதில்லை என நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், பட்டு மற்றும் பருத்தி கூட்டுறவு சங்கங்களில் மட்டும் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதுமட்டுமல்லாமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டநெசவாளர்கள் தனியாரிடம் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இம்மழையால் பணிகள் முடங்கி, சில நாட்களாகவே வருமானம் குறைந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

நெசவாளர்கள் நாள் முழுவதும் பணியில் ஈடுபட்டால் சராசரியாக 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை மட்டுமே கூலியாக பெற முடியும். மேலும்  கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், 25 ஆண்டுகளுக்கு முன் நெசவாளர்களுக்கு வழங்கிய வீடுகள் பலமிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த சூழலில் மழைக்காலத்தில் ஒழுகுவதால் பட்டு சேலை நெய்ய முடியாமல், ஒவ்வொரு வீட்டின் மேற்கூரையிலும் பிளாஸ்டிக் விரிப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுவர் முழுவதும் விரிசல் அடைந்து, கதவுகள் பெயர்ந்த நிலையில், பல வீடுகளை அப்பகுதியில் பார்க்க முடிகிறது.

மழைக்காலத்தில் வீட்டில் தங்கவே முடியாததால், சில வீட்டு உரிமையாளர்கள் வெளியிடங்களில் வசிக்கின்றனர். அந்தந்த கைத்தறி சங்கங்களின் நிர்வாகத்திடையே இதுகுறித்து பலதடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நெசவாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அண்ணா, முருகன் போன்ற கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் லாபத்துடன் இயங்கி வரும் சூழலில், இடிந்து விழும் நிலையில் உள்ள நெசவாளர்களின் குடியிருப்புகளை சரிசெய்வதில் மெத்தனம் காட்டி வருகின்றன. லாபத்தில் இயங்கும் சங்கங்கள் தங்களின் நெசவாளர்கள் குடியிருக்கும் வீட்டை சீரமைத்து தர மறுப்பது ஏன் என்ற கேள்வியையும் நெசவாளர்கள் எழுப்புகின்றனர்.பலமிழந்த நிலையில் கிடக்கும் நெசவாளர்களின் குடியிருப்புகளை சரி செய்ய, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வீடுகளை புனரமைக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்கு பருவ மழை நாட்களில் நெசவுத்தொழில் உண்மையாக பாதிப்படைந்து வருவதால், தமிழக அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.