காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பேரூராட்சியின் அலட்சியத்தால் 9 ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் குட்டி. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் பிருத்திக்கா (11) மாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் பிருத்திக்கா கடந்த ஒருவார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல் தீவிரமானதை அடுத்து, நேற்று சிகிச்சைகாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் சுகாதார மாவட்ட இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்கும் பொழுது
“உயிரிழந்த மாணவிக்கு டெங்கு அறிகுறிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குண்டான ஆய்வு இன்றுதான் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் 15 நாட்களாக அந்த மாணவிக்கு கடும் காய்ச்சல் இருந்ததாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்கப்பட்டு, பின் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அதனையடுத்து ஒருசில மணி நேரத்தில் அந்தச் சிறுமி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாங்காடு பகுதியில் அனுமதி இல்லாமல் பலருக்கு மருத்துவம் பார்த்து வந்த திருநாவுக்கரசு என்கின்ற போலி மருத்துவரை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்