காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், "நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்பத் தொகுப்பு ஒரே பலகைக்கல்லில் 1.5 அடி உயரம் 4.5 அடி நீளம் கொண்ட 'எழுவர் அன்னை' எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும். இவர்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமர்ந்த நிலையில் இரு கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி காணப்படுகிறார்கள்.
முதலில் பிராமியும் இரண்டாவதாக மகேஸ்வரியும் மூன்றாவதாக கௌமாரியும் நான்காவதாக வைஷ்ணவியும் ஐந்தாவதாக வராகியும் ஆறாவதாக இந்திராணியும் ஏழாவதாக சாமுண்டியும் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள்.
பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பர். ஆனால், இங்கு அவர்கள் காணப்படவில்லை. இவ்வூர் மக்கள் இதை அலையாத்தி அம்மன் என்கிறார்கள். ஆனால் இது எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் ஆகும்" என்றார்.