தமிழ்நாடு

காஞ்சிபுரம்: காவலாளியை கழிவறையில் அடைத்துவிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம்: காவலாளியை கழிவறையில் அடைத்துவிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி

webteam

சாலவாக்கம் அருகே இந்தியன் வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி. பாதுகாவலரை கடுமையாக தாக்கி கயிற்றில் கட்டி கழிவறையில் அடைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகின்றது இந்நிலையில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு கையில் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.

அப்போது வங்கியின் இரவு பாதுகாவலராக கரும்பாக்கம் அண்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஆபேல் (65) என்பவர் இருந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த மர்ம கும்பல் அவரை கட்டையால் சராசரியாக தாக்கியுள்ளனர். இதில், நிலை குலைந்த அவரை கயிற்றால் கட்டி அருகே உள்ள கழிவறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து கடப்பாறையால் வங்கியின் பின்புற சுவரை இடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போனதால் சுவற்றை துளையிட முயன்றும் தோல்வி அடைந்ததால் கொள்ளையர்கள் வெறுங்கையுடன் தப்பியோடினர். இதையடுத்து கழிவறையில் அடைக்கப்பட்டிருந்த ஆபேலை பொதுமக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சாலவாக்கம் காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், வங்கியில் இருந்து பணம் மற்றும் நகைகள் தப்பின.