தமிழ்நாடு

2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வழிந்தோடிய செய்யாறு தடுப்பணை... இன்று வறண்ட போன பரிதாபம்!

2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வழிந்தோடிய செய்யாறு தடுப்பணை... இன்று வறண்ட போன பரிதாபம்!

kaleelrahman

இரு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் வழிந்தோடிய செய்யாற்றின் தடுப்பணை தற்போது வறண்டு கிடக்கிறது.

உத்திரமேரூர் அடுத்த, வெங்கச்சேரி - மாகரல் செய்யாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டும் பணி, கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கியது. 'நபார்டு' எனப்படும், விவசாயம் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய வங்கி திட்டத்தில், ரூ.8 கோடி ரூபாய் செலவில், 1.7 மீட்டர் உயரம், 282 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரைக்கு மேல் கட்டப்பட்ட முதல் தடுப்பணை இது என்பதால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாறு நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் செய்யாறின் கரையோர விவசாயிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர். செய்யாற்றில் தடுப்பணை கட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் வராததால் அந்த ஆற்றங்கரையோர பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

செய்யாற்றில் தண்ணீர் வந்தால்தான் ஆற்றுப் பாசனம் மட்டுமல்லாமல் கிணற்றிலும் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெங்கச்சேரியில் உள்ள தடுப்பணையில் நீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடி சென்றதால் தற்போது மணல்மேடு தெரிய ஆரம்பித்துள்ளது. தடுப்பணையில் இருந்து சுமார் இரண்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு நீரானது தேங்கி நிற்கும் வடிவில் இந்த தடுப்பணை கட்டப்பட்டது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் நீர் நிரம்பி வழிந்து ஓடிய தடுப்பணை தற்போது வறண்டு காணப்படுவதோடு தடுப்பணை நீர்த்தேக்கம் ஆகாமல் முற்றிலும் நீர் தொடர்ச்சியாக கசிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை இரண்டு ஆண்டுகளில் தரம் இல்லாமல் நீர் கசிந்து வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்