வடகலை தென்கலை மோதல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: யார் பிரபந்தம் பாடுவது? வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!

PT WEB

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 2நாள் இரவு சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீதியுலா வந்து அருள்பாலித்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில், மண்டகப்படியின் போது பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

உலகபுகழ்பெற்ற அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக பிரம்மோற்ச்சவமானது கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் இரண்டாம் நாள் மாலை உற்ச்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தூப,தீராதனைகள் நடைபெற்று திருக்கோவிலிருந்து புறப்பட்டு டி.கே.நம்பி தெரு,ரங்கசாமி குளம்,கீரை மண்டபம்,மூங்கில் மண்டபம்,பேருந்து நிலையம் வழியாக மேற்கு ராஜவீதி வழியாக வந்து சங்கரமடம் எதிரே மண்டகபடி கண்டருளினார்.

அப்போது அங்கு தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாட முற்பட்ட போது வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமானது‌ ஏற்பட்டதோடு மோதல் ஏற்படும் சூழலானது நிலவியது. இதனையெடுத்து போலீசார் இரு தரப்பினருக்கும் இடையே நின்று உரிய நீதிமன்ற நகல் அளித்திருப்பது குறித்து கேட்டறிந்து பின்னர் தென்கலை பிரிவினர் பாட அனுமதிக்கப்பட்டனர்.

பிரபந்தம் பாடி கொண்டிருந்த எதிர் தரப்பினர் கூச்சல் எழுப்பியதால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டதோடு இதனை இரு தரப்பினருமே தங்களது செல்போன்களில் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய அங்கு செல்போன் தூக்கிய கை தான் ஓங்கியிருந்தது.

இதனையெடுத்து ஒரு வழியாக வாக்குவாதத்துடனே பிரச்னையானது முடிவுக்கு வந்து வரதராஜ பெருமாளுக்கு தூப, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு ராஜவீதிகள் வலம் வந்து மீண்டும் திருக்கோயிலை சென்றடைந்தார்.

பிரபந்தம் பாடுவதில் இந்த இருதரப்பினருக்கிடையே ஏற்படும் பிரச்சனை ஆண்டுக்கணக்கில் இருந்துவரும் நிலையில் பிரம்மோற்ச்சவத்தின் போது சாமியின் முன்பு பொதுவெளியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட வாய்போர் அங்கிருந்த பக்தர்களுக்கிடையே முகம் சுழிக்க வைத்தது.