தமிழ்நாடு

“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

webteam

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

மாணவர்களை விட 5.07 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 95.37 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 95.23 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 95.15 சதவிகிதம் பேரும் கோவை 95.01 சதவிகிதம் பேரும் நாமக்கலில் 94.97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள். இதுவே முழுமையான வெற்றி. இவ்வெற்றி தொடரட்டும். உங்களுக்குப் பிடித்ததையும் எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதிலும் கவனம் செலுத்துங்கள். நாளை நமதே என்கின்ற நல்வாழ்த்துக்களுடன் உங்கள் நான்” எனத் தெரிவித்துள்ளார்.