தமிழ்நாடு

கொல்லும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை : கமல்ஹாசன்

கொல்லும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை : கமல்ஹாசன்

webteam

கொல்லும் கொரோனா கூட சாதி மதம் பார்ப்பதில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் தங்கள் உறவுகளிடம் இருந்தும் விலகி இருந்து மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.

இதனிடையே சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு‌, காவல் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.