மக்களிடம் பேசுவதற்கு பிக் பாஸ் தளத்தை பயன்படுத்துவேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்படும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் தான், கமல் அரசியலுக்கு வருவதற்கு காரணம் என பலரும் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் கமல் நடிகனாக இல்லாமல், மக்களிடம் நேரடியாக பேசினார். நிகழ்ச்சியின் நேயர்களாக மக்களை பார்க்காமல், அவர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் பின்னர் தான் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் வேகம் எடுத்தது. அதன்பின்னர் அவர் தொடங்கிய ட்விட்டர் அரசியல், அதிமுகவினருடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தில் வந்து நிற்கிறது. தற்போது அவர் ஒரு கட்சியின் தலைவராகிவிட்டார். இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது பாகத்தை அவர் தொகுத்து வழங்குகிறார். இதுதொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக இன்று பேசிய கமல்ஹாசன், “பிக்பாஸ் என் சுயநலமல்ல, பொதுநலம். மக்களிடம் பேச இந்த தளத்தை பயன்படுத்துவேன். சினிமாவை விட தொலைக்காட்சி ரீச் அதிகம்” என்றார்.