குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தற்போது வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் அவர்கள் தேனி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிலர் பலியாகியிருக்கலாம் என மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் சிக்கியிருக்கும் மேலும் 9 பேரை மீட்கும் பணியில் கோவையிலிருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மீட்புப் பணியில் 16 கமாண்டோ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.