சென்னை எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
கச்சா எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் முகதுவாரம் பகுதிகளை படகில் சென்று கமல்ஹாசன் பார்வையிட்ட பின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படகில் சென்று பார்வையிட்ட பிறகு பேசிய கமல்ஹாசன், “நான் இந்த இடத்திற்கு இதற்கு முன்னரும் வந்திருக்கிறேன். கடந்த 7 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை விட தற்போது மிகவும் மோசமாக இருக்கின்றது. கடல்மீது எண்ணெய் கழிவுகள் பாய்விரிப்பை போல் படர்ந்திருக்கின்றன. டிசம்பர் 17ஆம் தேதிக்குள் எண்ணெய் கழிவுகளை அகற்றவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு தான் டிசம்பர் 17, இன்றும் எந்த கழிவுகளும் அகற்றப்படாமல் இருக்கின்றது. எண்ணெய் கழிவுகளை பாத்ரூம் பக்கெட்டை கொண்டு அகற்றச்சொல்கின்றனர்.
நிபுணர்களை கொண்டு கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்படவில்லை. இதுபோன்ற உயிர்கொல்லி வேலை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர வேண்டும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.