கமல்ஹாசன் PT
தமிழ்நாடு

“இது ஒருவருக்கொருவர் குறைகூறும் நேரம் அல்ல... உதவிசெய்யும் நேரம்” - ம.நீ.ம கமல்ஹாசன்

“அரசை பிறகு விமர்சிக்கலாம். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இப்பொழுது என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்” - கமல்ஹாசன்

Jayashree A

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 5000 பேருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன், மநீம கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பினார்.

இது குறித்து பின்னர் அவர் பேசுகையில், “இந்த முறை அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பொழுது குறை சொல்லிக்கொண்டிருப்பதைவிட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை. எனது வீட்டைக்கூட நான் கோவிட் நோயாளிகள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதித்து இருந்தேன். ஆனால் அதற்குள் எனது வீட்டை கோவிட் பாதிப்படைந்த இல்லம் என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றார்கள்.

இந்தமாதிரி இடர்பாடுகளை நாங்கள் நீண்ட நாட்களாக அனுபவித்து வருகிறோம். இது ஒன்றும் எங்களுக்கு புதிது அல்ல... நாங்கள் 40 வருடத்திற்கு முன்பு, அதாவது பெயர் தெரியாத சிறு கூட்டமாக இருந்த காலகட்டத்திலும் எங்களுக்கு தொந்தரவு இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் இதை பற்றி எல்லாம் பேசாமல் மக்களுக்கு உதவவேண்டும். அரசை பிறகு விமர்சிக்கலாம். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இப்பொழுது என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது கிளைமட் சேஞ்ச் (வானிலை மாற்றம்). உலகம் பூராவும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இது வடநாட்டிலும் உண்டு. இங்கு உள்ளவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கலாம். 20செ.மீ மழைப்பொழிந்தாலும் சென்னை தாங்கும், அதற்கான ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளோம் என்று. ஆனால் வந்த மழை 24 மணி நேரத்துக்குள் 56செ.மீ அடித்து விட்டது.

இச்சமயத்தில் நாம் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, மக்களுக்கு உடனே செய்யவேண்டிய வேலை என்ன என்பதை பார்க்கவேண்டும். ஒரு அரசு இயந்திரம் ஒருகோடி மக்களை உடனே சென்றடைவது என்பது சாத்தியம் இல்லை. நாமும் நமக்கு தேவையான முன்னேற்பாட்டுடன் உதவி செய்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டும்” என்று கூறினார்.