நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையின் சிறப்பு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இன்றைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய கமல்ஹாசன், அரசியல் வர்த்தகமாகிவிட்டதாக குற்றம்சாட்டினார். எளிமையான தலைவர்கள் தேவைப்படுவதாகக் கூறிய அவர், அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும் என்று கூறிய கமல், மக்களின் தேவைகளுக்கிணங்க சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். சாதியை எடுத்துவிடுவதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்றும் கமல் தெரிவித்தார்.