செய்தியாளர்: ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி (33). இவர், விருத்தாசலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஆயுள் காப்பீட்டு விரிவாக்க அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரும் பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அசோக் என்பவரும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் அசோக்கிற்கு பல பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது ரமணிக்கு தெரியவந்துள்ளது. இதனை ரமணி அடிக்கடி தட்டிக் கேட்டள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று காலை ரமணியின் தாய் லட்சுமி வழக்கம்போல் தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை. இதனால் அவரது அலுவலக செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த லட்சுமி, இன்று காலை ரமணியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டில் தனி அறையில் இருந்த கட்டிலில் ரமணி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்கிற்கு பல பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வருவதும் இதை தட்டிக் கேட்ட மனைவி ரமணியை அவர் கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும் வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை எடுத்துக் கொண்டு அசோக் தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் அசோக்கை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.