Jayaraman pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் - ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெயராமன் (27). டிப்ளமோ படிப்பை முடித்துள்ள இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகம் கொண்டிருந்த நிலையில், கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் பணத்தை இழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Death

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயராமன், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று நள்ளிரவு திருச்சியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார், விருதாச்சலம் ரயில்வே போலீசார் உதவியுடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் இழந்துள்ளதால் மனமுடைந்து ஜெயராமன் ரயில் முன் பாய்ந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம்

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.