விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

காலில் விழச் சொன்னாரா தவெக கட்சி நபர்? - பரவிய தகவலுக்கு விஜய் தோளில் சாய்ந்து அழுத பெண் விளக்கம்!

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பெண்மணி, விஜய் காலில் விழும்படி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்தப் பெண்மணி பதில் அளித்துள்ளார்.

Prakash J

"கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம், தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயர்ந்துவிடக்கூடாது என்ற அச்சமே நிலவுகிறது. கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறுபுறம், கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் களமிறக்கப்பட்டு அதிரடி காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களை அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யும் நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது விஜய் காலில் விழுந்து பெண்மணி ஒருவர் அழுதார்.

இதையும் படிக்க: மத்திய பிரதேசம்| கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க அரை நிர்வாணமாய் ஒன்றரை கி.மீ. ஓடிய இளம்பெண்!

ஆனால், அந்தப் பெண்மணியை, விஜய் காலில் விழும்படி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகின.

இதையடுத்து, நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியின் நிர்வாகிகளைப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அந்த தகவலை பாதிக்கப்பட்ட பெண்மணியே மறுத்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ”என்னை யாரும் விஜய் காலில் விழச் சொல்லவில்லை. எங்களுக்கு யாரும் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை. விஜய் வந்தபோது, என்னிடம் ’நீங்கள் யார்’ என்று கேட்டனர். அதற்கு நான், ’சிகிச்சை பெறுவோரின் மனைவி’ என்று கூறினேன். அதற்கு, ’நீங்கள் கொஞ்சம் முன்னாடி தள்ளி நில்லுங்கள். விஜய்யிடம் பேசலாம்’ என்றனர்.

விஜய் வந்தவுடன் என்னால் அழுகையை தாங்க முடியவில்லை. நான் அவரை கட்டிப்பிடித்து அழுதேன். ’நாங்கள் இல்லாதவங்க. நீங்கதான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு அவர், ’அழுகாதீங்க.. அழுகாதீங்க’ என்று கூறினார்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!