தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: `மாணவி உடலை பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள்’- எச்சரித்த நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி: `மாணவி உடலை பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள்’- எச்சரித்த நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

கள்ளக்குறிச்சி மாணவி உடலை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவு நகலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், `இரண்டாவது உடல் கூராய்வில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருமுறையும் உடல் கூராய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.

இந்நிலையில் அரசு தரப்பு விளக்கத்தில் அதிருப்தி இருப்பதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இதைக்கேட்ட நீதிபதிகள் பெற்றோரிடம், “நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்கூட, மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? ஒவ்வொரு முறையும் ஏன் பிரச்னை ஏற்படுத்துகிறீர்கள்? பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. அதேநேரம் மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள். மாணவியின் உடல் மறு கூராய்வு உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடாததால் ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறப்போவதில்லை” என தெரிவித்தனர். பின்னர், “அந்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்யவும்” என உத்தரவு பிறப்பித்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, உடல்கூராய்வு வீடியோ பதிவுகளை தரவேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் உடல் கூராய்வு அறிக்கைகளை தகுந்த தடயவியல் நிபுணர்களை கொண்டும் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கண்ணியமான முறையில் இறுதி சடங்கு நடத்துங்கள் என்று நீதிமன்றம் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

நீதிபதி இதுகுறித்து தெரிவித்துள்ள தீர்ப்பில், `மாணவியின் உடலை, நாளைக்குள் பெற்றோர் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். நாளை நண்பகல் 11 மணிக்குள் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். மாணவியின் உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள். மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று பகல் 12 மணிக்குள் தெரிவிக்கவும். இதுதொடர்பாக பெற்றோரிடம் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேசவும்.

மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர், அது பெற்றோருக்கு தெரியாமல் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் முழுவதும் பொய்யைப் பரப்பியுள்ளனர். அப்பள்ளியில் பயின்ற பிற மாணவர்கள் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றி யாரும் பேசவில்லை. வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்க்கவேண்டும். இதுதொடர்பாக 12 மணிக்குள் முடிவைச் சொல்லுங்கள்” என்றார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசித்து வருகிறார்” என்றார்.

இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு விசாரணை மீண்டும் பகல் 12 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.