Police pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்: கைது செய்யப்பட்டவர்களிடம் வடக்கு மண்டல ஐஜி நேரில் விசாரணை

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்றதாக பிடிபட்டவர்களிடம் மெத்தனால் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து சிபிசிஐடி மற்றும் வடக்கு மண்டல ஐஜி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகர் கருணாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 36க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள், இதற்கென அமைக்கப்பட்ட சிபிசிஐடி போலீசார் என பல்வேறு போலீசார் காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police investigation

இன்று காலை முதல் ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிபிசிஐடி தரப்பில் கோமதி, வினோத், சந்தாராம் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் காவல் நிலையம் வந்து பிடிபட்ட மூன்று பேரிடமும் மெத்தனால் எவ்வாறு கொண்டுவரப்பட்டு கலக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் கருணாபுரம் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் பிடிபட்ட மூன்று பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.