சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கு - சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள்:

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன், பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம்

அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை வாதம்:

இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தரப்பில், கடந்த 2023ம் ஆண்டில் மரக்காணத்தில் இதேபோல, விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியாகினர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், மக்களும், காவல் துறையிடம் புகார் அளித்தனர். எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது. கருணாபுரம் பகுதியில் 500 மக்கள் வசித்து வரும் நிலையில், 300 பேர் வரை விஷச்சாராயத்தை அருந்தியுள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து எத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம்

வழக்கறிஞர் கே.பாலு வைத்த வாதம்:

வழக்கறிஞர் கே.பாலு தரப்பில், ஆண்டுதோறும் இதுபோல் தொடர்வதால், அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும். அரசே போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதில் இருந்து போலீஸ் - கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்பது தெளிவாகிறது. அதனால் சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ் வைத்த வாதம்:

பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ், வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் தரப்பில், மாவட்ட நிர்வாகம், உள்ளுார் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து, கொண்டு வந்து விற்க முடியாது. ஆனால் போலீஸ், அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என அரசு கூறுகிறது. கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

CBI

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம்:

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு தரப்பில், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு விளக்கம்:

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில் 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. உள்ளூர் அரசியல்வாதி, போலீசார் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிடப்பட்டது.

court order

சிபிஐ-க்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு:

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது, அதில், சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்னைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரண சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. காவல் துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. மாநில போலீசார் கண்டும் காணாமலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்குகிறது.

அதேவேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என குறிப்பிட்டு, சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.