கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் ட்விட்டர்
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தியோர் உயிரிழப்பு 49 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தியதாக 150 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையானது நேற்று இரவு வரை 39 ஆக அதிகரித்திருந்தது. இந்த சூழலில் தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, சேலம் மருத்துவமனையில் ஏற்கெனவே 10 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கள்ளகுறிச்சியில் 27 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், சேலத்தில் 15 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சூழலில், விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 90 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் சூழலில், ஒருவருக்கு இரண்டு மருத்துவர்கள் என கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ. வேலு நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். கூடுதலாக, தீவிர சிகிச்சை பிரிவில் இவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாக்கெட்டில் எளிதாக கிடைக்கும் மலிவான சாராயத்திற்கு ஆசைப்பட்டு அருந்தியதில் உயிரை விட்ட இவர்களின் குடும்பங்களோ, கண்ணீரோடு கதறிக்கொண்டிருக்கின்றன.

நேற்றைய தினம், கருணாபுரம் பகுதியை சேர்ந்த உயிரிழந்தோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து அவர்களது உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனிடையே உடல்களை அடக்கம் செய்வதற்காக கோமுதி நதிக்கரை பகுதியில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அப்போது பெய்த கனமழையால் எரியூட்டப்படுவதற்காக வைக்கப்பட்ட கட்டைகள் மழையில் நனைந்தன.

பின்னர் மழை சற்று ஒய்ந்ததும் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து கருணாபுரத்திலிருந்து ஒவ்வொரு உடலும் ஊர்வலமாக கோமுகி நதிக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு 21 பேரின் உடல்கள் தகனமும், 7 பேரின் உடல்கள் அடக்கமும் செய்யப்பட்டன. ஒரே இடத்தில் பலரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது பார்ப்பேரின் இதயத்தை உருக்குவதாக அமைந்தது.