கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஷச்சாராய உயிரிழப்புகள் பற்றிய விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் உடல்நலத்தை விசாரித்த பின் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் பிரசாந்த் கூறுகையில், “இதுவரைக்கும் 109 பேர் சிகிச்சை பெற வந்துள்ளனர். அதில், 29 பேர் உயிரிழந்துள்ளனர் (ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்த நேரப்படி). உடற்கூராய்வு செய்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் எல்லாம் வரவழைக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம், திருச்சி போன்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ வல்லுநர்கள் வந்துள்ளனர். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் இருந்து உங்களுக்கு தகவல் கொடுப்பார்கள்” என தெரிவித்தார்.