கள்ளக்குறிச்சி முகநூல்
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் - அடுத்தடுத்த வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயத்தினால் 49 பேர் உயிரிந்துள்ள சூழலில், அந்த சாராயத்தை விற்ற முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அருந்தியதாக 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சியில் 27 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், சேலத்தில் 15 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சேகர் என்பவரின் மகன் தினகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது கோவிந்த ராஜ் என்று தெரியவரவே, கோவிந்தராஜ், அவரின் சகோதரன் தாமோதரன், கோவிந்தராஜின் மனைவி விஜயா ஆகியோரை கள்ளக்குறிச்சி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில்தான் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கைதான மூவரை விசாரணை செய்ததில், அவர்கள் தொடர்ச்சியாக சின்னத்துரை என்பவரிடமிருந்துதான் கள்ளச்சாரயம் வாங்கி வந்தது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து சின்னத்துரையை விசாரணை செய்ததில், அருகாமையில் இருக்கும் கள்வராயன் மலையிலிருந்துதான் காய்ச்சியது தெரியவந்தது. தற்போது, கைதான 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தவகையில், வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி வரை இக்காவலானது தொடரும் என்று தெரிகிறது.

இந்தநிலையில்தான் கள்ளக்குறிச்சியில் சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்த மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மாதேஷிடமிருந்து மெத்தனால் வாங்கிய சின்னத்துரை, அதனை கோவிந்தராஜ்க்கு விற்பனை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.