அண்ணாமலை, மோகன் ராஜ் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கள்ளக்குறிச்சி EX எஸ்.பி.!

விஷச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கான காரணத்தை விளக்கி, அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Prakash J

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம், தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயர்ந்துவிடக்கூடாது என்ற அச்சமே நிலவுகிறது. கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறுபுறம், கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் களமிறக்கப்பட்டு அதிரடி காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

இந்த நிலையில், விஷச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக செய்திகள் வெளியாகின. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இதுகுறித்து பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், “கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த திரு. மோகன்ராஜ் அவர்கள், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. திரு.மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன” எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், மோகன்ராஜ், தாம் விருப்ப ஓய்வுபெற்றதற்கான காரணத்தை விளக்கி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்து கொள்வதற்காக எனது மனைவியுடன், நான் அங்கு செல்ல வேண்டி இருந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால், எனது இந்த முடிவு குறித்து கள்ளக்குறிச்சி துயர சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தற்போது சிலர் சமூக வலைதளங்களில் தவறான விரும்பத்தகாத தகவலை பரப்பி வருகின்றனர்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மத்திய பிரதேசம்| கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க அரை நிர்வாணமாய் ஒன்றரை கி.மீ. ஓடிய இளம்பெண்!