மருத்துவமனை புதிய தலைமுறை
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரின் உடல் உறுப்புகளை காக்க தீவிர சிகிச்சை!

விஷ சாராயம் அருந்தி சிகிச்சைப் பெற்று வருவோருக்கு உடலுறுப்பு செயலிக்காமல் இருக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 190 பேர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், உள்நோயாளிகளாக இருந்து 140 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பதால் அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ள சுகாதாரத்துறை, விஷசாராயம் அருந்தியவர்கள் அதை மறைக்காமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெறவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவோருக்கு, மருத்துவர்கள் முழு கவனத்துடன் சிகிச்சை அளித்துவருகின்றனர். மூக்கு வழியாக பிராணவாயு செலுத்தப்பட்டு, நரம்பு வழியாக குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் ஒரு மணிநேரத்திற்கு எத்தனால் ஊசி ஒன்றும், ரத்த நாளத்தில் பைகார்பனேட் அளவை சரிசெய்ய சோடியம் பைகார்பனேட் ஊசியும் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

உடலுறுப்பு செயலிழக்காமல் இருக்க ஹிமோடயலைசிஸ் செய்வதோடு, பெண்டோபிராசோல் ஊசியும் நோயாளிகளுக்கு போடப்படுகிறது. மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டால் செயற்கை சுவாசம் அளிக்க வெண்டிலேட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு 67 அரசு மருத்துவர்கள் வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.