மாணவன் முனியப்பனுடன் மாவட்ட ஆட்சியர் புதியதலைமுறை
தமிழ்நாடு

பேட்டரி வண்டி வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி சிறுவன்.. கலெக்டரின் அடடே செயல்!

கள்ளக்குறிச்சி அருகே பேட்டரி வாகனம் வேண்டி சமூக வலைத்தளம் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவன்; 24 மணி நேரத்தில் அதிநவீன சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

யுவபுருஷ்

செய்தியாளர் - பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். 14 வயதுடைய இந்த மாணவனுக்கு இரண்டு கால்களும் செயலிழந்ததால், இவரை தினமும் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பள்ளிக்கு தூக்கிச் சென்று படிக்க வைத்து வருகிறார் தாய். இத்தகைய சூழலில் இருக்கும் முனியப்பன், தனக்கு பேட்டரி வண்டி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து கோரிக்கை வைத்தார்.

சமூக வலைத்தளங்களில் இதனை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உடனடியாக உரிய உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆணையின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை ஊர்தி மூலம் மூங்கில் துறைப்பட்டு சென்று ஆய்வு செய்யப்படடு பீட்டர் வீல்சேர் முனியப்பன் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு முன்னுரிமையுடன் சக்கர நாற்காலி வழங்க தேர்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, முதலமைச்சரின் ஆணையின்படி, அதிநவீன பீட்டர் வீல்சேரை மாவட்ட ஆட்சியர் தனது கைகளால் வழங்கினார். இவை அனைத்தும் மாணவன் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் நடந்ததுதான் ஆச்சரியம். இதனிடையே, கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்த முதல்வர் மற்றும் ஆட்சிருக்கு மாற்றுத்திறனாளி மாணவன் மற்றும் அவரது தாய் இருவரும் நன்றி தெரிவித்தனர்.