தமிழ்நாடு

கேளம்பாக்கம் பள்ளிக்கும் எனக்கும் தொடர்பில்லை: சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் தகவல்

கேளம்பாக்கம் பள்ளிக்கும் எனக்கும் தொடர்பில்லை: சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் தகவல்

webteam

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களில், சிபிசிஐடி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் கைது செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், கேளம்பாக்கம் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்‌ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருவதாகவும், ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்கு சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும், பள்ளிக்கும் எதிராக புகார் அளித்த பெண், புகார் அளிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அந்த பள்ளியில் நாட்டிய நிகழ்வை நடத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரத்தக் கொதிப்பு, நீரழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் தனக்கு இருப்பதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூட சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாகவும் சிவசங்கர் பாபா குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான வழக்கு பொய்யாக புனையப்பட்டது என்பதால், தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆன்மிக பயணம் செல்வதற்காக டெல்லி சென்ற தன்னை சிபிசிஐடி கைது செய்து ஒவ்வொரு வழக்காக பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சிவசங்கர் பாபாவின் இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.