பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த வாரத்தில் மாணவிகள் குற்றஞ்சாட்டினர். புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் சார்பில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அதில் ‘பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்யவும்’ என மாணவிகள் வலியுறுத்தினர்.
சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மாணவிகள் கூறவே, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தமிழ்நாடு சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.
பின் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள், நான்கு பேர் மீது புகார் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார். இதிலும் ஹரிபத்மன் என்ற உதவி பேராசிரியர் மீது கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் எழுத்துப்பூர்வமாக பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஹரி பத்மனை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலைமறைவானதால் சிக்கல் நீடித்தது. இதனிடையே மாதவரத்தில் பதுங்கியிருந்த ஹரி பத்மனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்ட ஹரி பத்மனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுனர். இதையடுத்து ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹரிபத்மன் கைது ஒருபக்கம் இருக்க, கலாஷேத்ரா கல்லூரியில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் நீக்கம் செய்துள்ளதாக கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் தற்போது மற்றொரு நடவடிக்கையாக இன்றைய தினம் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைத்துள்ளது கலாஷேத்ரா அறக்கட்டளை.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தாமான் ஆகியோர் அக்குழுவில் உள்ளனர்.
தொடர்ந்து இவ்விவகாரத்தில் அடுத்தடுத்தகட்ட நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் சார்பிலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.