நாடு முழுவதும் இன்று கார்த்திகை தீப பெருவிழா வெகு விமரிசையாக உற்சாகத்துடன் கொண்டாட உள்ளது. இந்த தீபத்திருநாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபட தயாராகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அகல்விளக்கு விற்பனை:
கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை உள்ள நீலகண்ட தெருவில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல்விளக்கு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா, பழைய பேட்டை, சேலம் சாலை, சப் ஜெயில் ரோடு, போன்ற இடங்களில் சாலை ஓரங்களில் அகல் விளக்குகள் விற்பனை செய்து வருகின்றனர்.
வழக்கமாக மண் விளக்குகளில் விற்பனை செய்வது வழக்கம், ஆனால் பொதுமக்கள் அதிகளவில் வண்ண வண்ண மாடல்களில் விளக்குகள் வாங்க ஆர்வம் காட்டுவதால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விருதாச்சலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஓடுகளால் ஆன விளக்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு லட்சுமி விளக்கு, மற்றும் கண்ணாடி அகல் விளக்கு, என புதிய வகைகளும் சிறியது முதல் பெரியது வரையிலான விளக்குகளும் விற்பனை செய்கின்றனர்.
இதையடுத்து பத்து ரூபாய்க்கு நான்கு விளக்குகள் முதல் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வண்ணங்களில் மாடல்களில் உள்ள விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை தீபம் ஏற்பாடுகள் என்னென்ன?
இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதற்காக 1200 பேருந்துகளை நிறுத்தும் வகையில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12,500 கார்களை நிறுத்தும் வகையில் 59 கார் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 2692 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்போது ஒன்பது ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 14 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15, 108 அவசர ஊர்திகள். 10 பைக் ஆம்புலன்ஸ் ஆகியவற்றுடன் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிகமாக வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் மற்றும் டாய்லெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருகின்றனர்.
கிரிவலப் பாதையில் மொட்டை அடித்தல், அன்னதானம் வழங்குதல், பல தெய்வ வழிபாடு என 20 லட்சம் பக்தர்களுக்கு மேல் திருவண்ணாமலையில் குவிந்து இருக்கிறார்கள்.
திருத்தணி முருகன் கோவில்:
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக கூறப்படும் திருத்தணி முருகன் கோயிலில் மாலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது, மூலவர் கடவுளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் கிருத்திகை ஒரே நாளில் வந்ததால், ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே மலைக் கோயிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானை அரோகர என்று கோஷத்துடன் வழிபட்டு வருகின்றனர். மாலை 6 மணிக்கு 100 கிலோ நெய் மகா தீபம் ஏற்றப்படும். நிகழ்வில் பங்கேற்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முதலில் மலைக்கோயில் மாட வீதியில் வள்ளி தெய்வானை சமேத உற்சவர் எழுந்தருளி சொக்கபாணையில் மகா தீபம் ஏற்றிவைக்கப் படுகின்றது. இதனை அடுத்து மலைக்கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ள பச்சரி மலையில் மகா தீபம் ஏற்றிவைக்கப்படும். மகா தீபத்தை காண பெரும் அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளதால் பேருந்து நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.