திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டடத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டத்தை நாளை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, “தங்களுடைய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வராத இல்லத்தரசிகள் வருகின்ற 18ம் தேதி முதல் கோட்டாட்சியரிடம் ஆன்லைன் மூலம் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். தகுதியுடைய இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபடக்கூடாது என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார்” என்று கூறினார்.
முதற்கட்டமாக, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கு சரிதானா என்று பரிசோதிக்கும் விதமாக, வங்கி கணக்குகளில் தலா 1 ரூபாய் செலுத்தி நேற்று சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.