தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்.15 (நேற்று) முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்துக்காக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பங்கள் ஏற்கப்படாத மகளிருக்கும் தமிழக அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தவர்கள் இ சேவை மையங்கள் மூலம் நாளை மறுநாள் (செப் 18) முதல் விண்ணப்பிக்கலாம். 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும் என்றும் குறுஞ்செய்தி மூலம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை நேரில் அணுகி காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் திட்டம் குறித்தும் அதில் பணியாற்றியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.
இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், TamilNadu e-Governance Agency பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!
களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!” என தெரிவித்துள்ளார்.