தமிழ்நாடு

“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்

“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்

webteam

‘கஜா’ புயல் காரணமாக நீர் நிலைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என ‌தமிழக அரசுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

வரும் 15ஆம் தேதி பிற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலை ஒரு மீட்டர் அளவுக்கு உயரக்கூடும் என்பதால் நாகை, தஞ்சை புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கடலூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களிலும் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் நாளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே 24 மணி நேரமும் சிறிய மற்றும் நடுத்தர அணைகளைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக க‌னமழை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்றும், நீர் நிரம்புவதற்கான இடைப்பட்ட நேரம் குறைவாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுமாறும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.