தமிழ்நாடு

”தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லையா.?”- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடம்பூர் ராஜூ பதிலடி

”தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லையா.?”- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடம்பூர் ராஜூ பதிலடி

webteam

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என பொன்.ராதாகிருஷணன் கூறிய கருத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்தில் அவரின் குடும்பத்தினரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, “கடந்த 18ம் தேதி மணக்கரை கிராமத்தில் ரவுடி துரைமுத்துவை பிடிக்க சென்றபோது வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் துடிப்புமிக்க காவலராக பணிபுரிந்து உள்ளார்.

அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி காவல்துறைக்கும் பெரிய இழப்பு. தமிழக முதல்வர் காவலர் சுப்பிரமணியன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அடக்கத்தின் போது காவல்துறை தலைவரையே கலந்து கொள்ள உத்தரவிட்டார். அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரசு அறிவித்த ரூபாய் 50 லட்சம் நிவாரண தொகையும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் விரைவில் வழங்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை என அவர் தெரிவித்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.