ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 5000க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலாத் தலங்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடும்பம் குடும்பமாக சென்று ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழா நடைபெற்றது.
ஈரோடு வஉசி பூங்காவில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவிகள், குழந்தைகள் இணைந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்களுக்கு இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடையாது. பெண்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து அனைவருடனும் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். குழந்தையைப் போல பெண்களும் ஆடிப் பாடி மகிழ்ந்து தங்களது சோகத்தை மறந்தனர். விழாவில் பங்கேற்ற ஒரு பெண், “கணவர் தொல்லை இல்லை. உறவினர் தொல்லை இல்லை. இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறோம். வருடந் தவறாமல் இந்த விழாவிற்கு வந்துவிடுவோம். இன்று என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்றார்.
மற்றொரு பெண், “ வீட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு. ஆனால் இங்கு முதல்முறையாக வருகிறேன். மற்றவர்கள் ஆடிப்பாடி மகிழ்வதை பார்த்தபோது எனக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. அதனால் நானும் முடிந்தவரை என்ஜாய் பண்ணிவிட்டேன்” என கூறினார்.