தமிழ்நாடு

கே.பி.பார்க் குடியிருப்பு: கட்டுமான நிறுவனத்துக்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலதடை

Veeramani

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை தரமற்ற முறையில் கட்டியதாக, கட்டுமான நிறுவனத்துக்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கே.பி.பார்க் பகுதியில் 112 கோடி மதிப்பில் ஆயிரத்து 920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவற்றில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து வந்த நிலையில், கட்டுமானம் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி நிறுவனத்தை ஏன் தடை பட்டியலில் சேர்க்கக்கூடாது என விளக்கமளிக்கக்கோரி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குடியிருப்புகளை சரி செய்துதரும் பணி 93 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், இந்நிலையில் தடை பட்டியலில் சேர்த்தால் அது சீரமைப்பு பணிகளை பாதிக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்ததோடு விசாரணையை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.