தமிழ்நாடு

“75 நாட்கள்; 1500 கூட்டங்கள்” - திமுகவின் பரப்புரை குறித்து கே.என்.நேரு தகவல்

webteam

சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராகும் வகையில், ஜனவரி மாத தொடக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்னும் பரப்புரை குறித்து அறிவித்தார். அதன்படி 75 நாட்களில் 1500 கூட்டங்கள் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும், இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருகுவளையில் பரப்புரையை தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து, மகளிரணி செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் வரும் 29ஆம் தேதி பரப்புரையை தொடங்குவதாகவும் கே.என்.நேரு தெரிவித்தார். டிசம்பர் 2ஆம் தேதி துணை பொது செயலாளர் பொன்முடி, பரப்புரை மேற்கொள்வார் என கூறிய அவர், டிசம்பர் 11ஆம் தேதி மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், எஸ்.செந்தில் குமார் உள்ளிட்டோரும் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.