தமிழ்நாடு

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா

webteam

சர்கார் படக்கதை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவாக முடிவெடுத்த நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்றதலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்தநீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதனிடையே, செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு, வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தது. அதோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கே.பாக்யராஜின் கடிதத்துக்கு பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கதை என்னுடையது தான் என்று முருகதாஸ் பிடிவாதமாக இருந்த நிலையில் செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என பாக்யராஜும் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.

இதனையடுத்து சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் "நன்றி ராஜேந்திரன்" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் இதுதொடர்பான வழக்கு சமரசத்தில் முடிந்தது. இதுதொடர்பாக பேசிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாள சங்க தலைவர் பாக்யராஜ், “ வருண் எழுதிய கதையின் கருவும் சர்கார் பட கதையின் கருவும் ஒன்றுதான். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இயக்குநர் முருகதாஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தேன். வருணின் கதை என ஒப்புக் கொண்டால் தன்னை தவறாக பேசுவர் என முதலில் முருகதாஸ் மறுத்தார். இதனையடுத்து இணை இயக்குநரான வருணின் பிரச்னை பற்றி முருகதாஸிடம் விளக்கினேன். எனது மகன் கூட விஜயின் ரசிகன்தான். ஆனால் சங்க தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் காயப்பட்டது நான்தான். விஜய் ரசிகர்கள் எனது முடிவை புரிந்து கொள்ளாமல் எனது மகனை கடுமையாக விமர்சித்தனர். என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். தான் பதவியேற்று 6 மாதங்களேஆன நிலையில் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.