அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை முடக்கியது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியநிலையில், அதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை முடக்கியது ஏன் என்பது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மகளிருக்கான இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்தால், அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும். திமுக ஆட்சியில் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த திட்டமே மகளிருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 28 அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ளார்.
1. “குக்கிராமங்களைப் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் 1346 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
2.மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ஊரகச் சாலைகளை வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாக தரம் உயர்த்த 1200 கி.மீ. சாலைகள் மற்றும் 136 பாலங்கால் 874 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
3.எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் 431.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
4.ஊரகப் பகுதிகளில் 1261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
5. நீர் மற்றும் நிலவள மேலாண்மைப் பணிகள் 683.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
6.கிராம ஊராட்சிகளில் மின் ஆளுமையைச் செயல்படுத்திட அலுவலர்களுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் பயிற்சி வழங்குவதுடன் புதிய கணினி அச்சிடும் இயந்திரம் மற்றும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
7.ஊராட்சிகளின் அனைத்துச் சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
8.கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்.
9.கிராம ஊராட்சியின் மின் நுகர்வு மற்றும் குடிநீர்க் கட்டணம் இணையவழி மூலம் செலுத்தும் முறை உருவாக்கப்படும்.
10.தமிழகத்தின் மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும்,பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும்,381.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 லட்சம் பனை விதைகள் மற்றும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
11.கலைஞரின் அனைத்து கிராம ஒருக்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேளாண் நிலங்களில் 8.45 லட்சம் பழ மரக்கன்றுகள் 11 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்படும்.
12. பசுமையான் தமிழகத்தை உருவாக்க மகளிர் குழுக்களின் கூட்டமைப்புகளை ஈடுபடுத்தி,புதிய நாற்றங்கால்கள் 92.12 கோடி ரூபாய் மதீப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
13. இரும்புசத்துக் குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முருங்கை மரக்கன்றுகள் வழங்கப்படும்.
14. 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழா 1.94 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
15. 45 ஆயிரம் இளைஞர்களுக்கு 170 கோடி ரூபாய் செலவில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும்.
16. மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் 5.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்.
17. சுய உதவிக் குழுக்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்.
18. ஊரகப் பகுதிகளில் உள்ள 15 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு 225 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
19. 25 ஆயிரம் புதிய உதவி சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் இக்குழுக்களுக்கு 30 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.
20. ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் தேசிய அளவில் தலைசிறந்த நிறுவனங்களில் தலைமைத்துவம் மற்றும் வேளாண்மை பயிற்சிகள் 3.8 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
21. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதற்காக மாநில மாவட்ட மற்றும் வட்டார அளவிலான திட்ட மேலாண்மை அலகுகள் ஏற்படுத்தப்படும்
22. வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்ககத்தில் மக்கள் குறைதீர் மையம் அமைக்கப்படும்.
23. நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் 14.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் முதன்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
24. சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக அனைத்து சமூகத்தினரும் பயன்பெறத்தக்க வகையில் முன்மாதிரியாக 10 எரிவாயு தகன மேடையில் ரூபாய் 17.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
25. ஊரகப் பகுதிகளில் சமூக பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
26. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி மேற்பார்வையாளர்களின் நேரடி நியமனம் மேற்கொள்ளப்படும்.
27. 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகக் கட்டிடங்கள் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
28. கிராமப்புற குழந்தைகளுக்காக 500 அங்கன்வாடி மையங்கள் 59.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.