தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவு தலைவராக தருண் அகர்வாலா நியமனம்

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவு தலைவராக தருண் அகர்வாலா நியமனம்

webteam

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உள்ள குழுவின் புதிய தலைவராக மேகாலய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் ஆய்வுக்குழு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வசிஃப்தார் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். தனிப்பட்ட காரணங்களாக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என, தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனத்திடம் கருத்து கேட்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரையே ஆய்வுக்குழு தலைவராக நியமிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. 

வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரையே நியமிக்க வேண்டும் என அந்நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா ஆய்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் வசிஃப்தாருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் தருண் அகர்வாலாவுக்கு வழங்கப்படுவதாக பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மனுதாரரும், எதிர்மனுதாரரும் வழக்கு தொடர்பான ஆவணங்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. தருண் அகர்வாலா தலைமையிலான குழுவுக்கு தமிழக அரசு சார்பில் போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.