மருந்து மூலப் பொருள்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளது வேதனையளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் நிறுவனத்துக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்க மத்திய அரசின் நிதித்துறை, மருந்து துறையின் இணைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை வாய்ந்த பலரையும் நாம் இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதி, உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக இருந்து வந்ததை சுட்டிக்காட்டினார்.
மருத்துவ மூலப் பொருட்களுக்கு 90 சதவீதம் அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பி இருப்பதால், தரம் குறைந்த மருந்துகளும் விற்பனைக்கு வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு ஒரே நாட்டை மட்டுமே நம்பி இருப்பது அண்டை நாட்டின் அத்துமீறலையும், பாதுகாப்பையும் திறமையாக சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் என நீதிபதி கிருபாகரன் எச்சரித்துள்ளார்.