சென்னை உயர்நீதிமன்றம் PT
தமிழ்நாடு

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டவர் நேரில் வந்து சாட்சி... காவல்துறையை எச்சரித்த நீதிபதி

PT WEB

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நந்த கிஷோர் சந்தக் என்பவர், தனது உறவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆறு பேர் மீது 2017 ஆம் ஆண்டு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்,

இதையடுத்து தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆறு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், சொத்து பிரச்னை காரணமாக பிரச்னை ஏற்பட்டதாகவும், தற்போது சமரசம் செய்துவிட்டதாகவும், கூறியுள்ளனர்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு வந்தபோது, “கொலை வழக்கில் எப்படி சமரசம் செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “நந்த கிஷோர் சந்தக் கொல்லப்படவில்லை. அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்” என சுட்டிக்காட்டினார். இதையடுத்தே கொலை மிரட்டல் என்ற வழக்கு, கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது நீதிபதிக்கு தெரியவந்தது.

“கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இங்கு உயிருடன் உள்ள நிலையில், எப்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது?” என கேள்வி எழுப்பிய நீதிபதி, நந்த கிஷோர் சந்தக்கை பார்த்து “கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களை பார்த்துக் கொள்கிறேன்” என நகைச்சுவையாக கூற நீதிமன்ற அறையில் சிரிப்பலை ஏற்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இதையடுத்து, இது போன்ற செயல்கள் காவல்துறையை கேலிக்குள்ளாக்கும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதிகள், இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, ஆறு பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.