தமிழ்நாடு

கருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Rasus

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்-க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுளள்து.

கடந்த 16-ஆம் தேதி சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், காவல்துறையினரையும் முதலமைச்சரையும் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸை இன்று அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்காக நள்ளிரவு முதலே அவரது வீட்டு முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கருணாஸ் கைதை அறிந்து அவரது வீடு முன் குவிந்த ஆதரவாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கருணாஸை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர் சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் விசாரித்தனர்.

இதையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கருணாஸ் மீதான வழக்கில் கொலை முயற்சி பிரிவை ரத்து செய்தும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.