சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற, முந்தைய அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அதிமுக தரப்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தப்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.