senthil balaji, ed, madras high court Pt web
தமிழ்நாடு

துறை இல்லாத அமைச்சராக தொடர முடியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் மீது இன்று தீர்ப்பு!

webteam

‘சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்’ என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

RN Ravi - Senthil Balaji - MK Stalin

அதேபோல செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்றது.

விசாரணையின் போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அரசியல் சட்ட பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, “அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. ஆளுநரோ, குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என்று அரசியல் சட்டம் தெரிவிக்கிறது.

Senthil balaji

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டு வாதிட்டார். மேலும், “இந்த கோ வாரண்ட் விசாரணைக்கு உகந்ததல்ல. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக செயல்பட முடியாது. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி தரப்பில், “அமைச்சரவை ஆலோசனைபடிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளது. அதுபோன்ற சூழல் நிலவுகிறதா இல்லையா என பார்க்க வேண்டும்” என அவரது வழக்கறிஞர் சக்திவேல் பதில் வாதம் முன்வைத்தார்.

minister senthil balaji

மேலும் வழக்கறிஞர் சக்திவேல் “'குற்ற பின்னணி, சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு' இருப்பதாகக் கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் பின் உரிய காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்ட விதிகளின்படி ஆளுநர் செயல்பட்டுள்ளார்” எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தரப்பில் பதில் வாதம் செய்த மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது. தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது” என வாதிட்டார்.

judgement

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை (செப்டம்பர் 5) தீர்ப்பளிக்கிறது.